பாலைவன பரங்கியன்

அரசியல்வாதிகள் குறித்த விமர்சனங்களுக்கான வலைப்பூ

Friday, February 10, 2006

கறுப்பு கதைகள்

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்கிறது தேசிய பொருளாதார ஆய்வுக்கவுன்சிலின் ஆய்வுகள். சுமாரான மாநிலமான ஹரியானாவில் மட்டும் 482 கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்.இது பெங்களூரை விட அதிகம். 1.5 கோடி பேர் 'கிரெடிட் கார்டு' வைத்திருக்கிறார்கள். ஆனாலும் தங்கள் வருட வருமானம் 10 லட்சத்திற்கும் மேல் என்று தெரிவிப்போர் வெறும் 85,000 பேர் தான் என்கிறது வருமான வரித்துறை.

அர்விந்த் விர்மானி என்பவரின் ஆய்வின்படி வரி கட்ட வேண்டியவர்களில் 74% பேர் வரி வலைக்கு வெளியே இருப்பதாக கூறுகிறார். உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவிகித கறுப்புப்பண ஆதிக்கம் இருப்பதாக மதிப்பிடுகிறார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அருண்குமார்.

சீர்திருத்தம் மற்றும் தாரளமயமாக்கலுக்கு பிறகு நியாயப்படி கறுப்புப்பண விகிதம் குறைந்திருக்க வேண்டும், ஆனால் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்து(1975-ல்) 97.5% இருந்த வரியை 33% குறைத்தும்,பல மன்னிப்புத்திட்டங்கள் மற்றும் தண்டனை மிரட்டல்கள் அறிவித்தும் கறுப்புப்பணத்தின் அளவு பல மடங்கு அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை. 1983-ல் 36,786 கோடியாக இருந்த கறுப்புப்பணம் தற்போது 9,00,000 கோடியாக (என்ன தலை சுத்துதா)அதிகரித்திருக்கிறது.தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிலையத்தின் பொருளாதார வல்லுனர் இந்திரா ராஜாராமனும் இதை ஒப்புக்கொள்கிறார்.

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்,கறுப்புபண வளர்ச்சி தொழில்துறை மற்றும் விவசாயத்துறையை விட சேவைத்துறையில்(அதாங்க டாக்டரு,இஞ்சினியரு,வக்கீலு-இவங்கலெல்லாம் சொல்லுவாங்களே "சர்வீஸ் ஃபீசு") தான் அதிகம். இத்துறையில் மூன்றில் இருவர் வரி ஏய்ப்பு செய்வதாக தெரிகிறது. இந்தத்துறையில் மட்டும் கணக்கில் வராத வருமானம் 3,00,000 கோடியை தொடும். இதனால்தான் நடிகர்கள்,உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள்,அரசியல்வாதிகள் என அனைவரும் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளை கட்டுகிறர்கள்.நூறு பேருக்கு இலவச சேவை செய்து விட்டு மற்றவற்றை பதுக்கி விடுகிறார்கள். இவற்றில் வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் சில மத அமைப்புகளும் அடங்கும். அமெரிக்காவுக்கு கூட "சூறாவளி நிதி" வழங்கிய மத அமைப்பு இங்குண்டு.

தொழிலதிபர்கள்,அதிகாரிகள் தவிர அரசியல்வாதிகள்தான் அதிகளவில் கறுப்புப்பணம் வைத்திருக்கிறார்கள். திட்டங்களை செயல்படுத்த எல்லா மட்டத்திலும் லஞ்சம் பெறுவதின் மூலம் வருடந்தோறும் அரசுத்திட்டங்களே 60,000 கோடி ரூபாய் அளவிற்கு கறுப்புபணம் உருவாவதற்கு வழிவகுக்கின்றன. மேலும் பதவியிலிருக்கும்போது பொது சொத்துக்களை குறைந்த விலைக்கு வாங்குதல்,மின் திருட்டு (மொத்த உற்பத்தியில் 20% திருடப்படுகிறது), பணியிட மாறுதலுக்கு பணம் பெறுவது, தொழில் தொடங்க லைசென்ஸ்-க்கு என பல வகையிலும் பணம் பிடுங்கப்படுகிறது. இவை எல்லா ஆட்சியிலும் சத்தமில்லாமல் நடந்துக்கொண்டிருக்கிறது. இது தவிர பெரிய அளவிலான ஊழல்களும் நடக்கின்றன. 1987-ல் போஃபர்ஸ் தொடங்கி 12-க்கும் மேற்பட்ட மெகா ஊழல்கள் நடந்துள்ளன. இவற்றின் மூலம் 25,000 கோடிக்கும் அதிகமாக சுருட்டப்பட்டுள்ளது.

இவையெல்லாம் ஆட்சி மாற்றங்களின் போது வெளியே தெரிந்தாலும்,விசாரணைக்கமிஷன் அமைத்து விசாரித்து முடிப்பதற்குள் குற்றம் சாட்டப்பட்டவர் செத்தே விடுகிறார். அல்லது தண்டனை பெற்றவர்களை பார்த்தோமேயானால் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவே உள்ளது, மேலும் குற்றவாளிக்குரிய தண்டனைகளும் நகைப்புக்குரியதாகவே இருக்கிறது. இந்நிலைமைகள் இல்லதொழிய சட்ட மாற்றங்களால்தான் முடியும் என,என்னுடைய முந்தைய பதிவையே மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திக்கொள்கிறேன்.

Tuesday, February 07, 2006

முதல் சிந்தனை…

ஒரு நாட்டின் மொத்த மக்கள் பிரதிநிதிகளில் ஆறில் ஒருவருக்கு நீண்ட கிரிமினல் ரெக்கார்டு உண்டு.எங்கேன்னு கேட்கறீங்களா? நம்ம இந்தியாலதான்.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தற்போதைய 542 மக்களவை உறுப்பினர்களில் 98 பேர் எல்லாக் குற்ற பின்புலமும், இருந்து எம்.பி -யாக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் முன்னணியில் இருப்பது பெரிய மாநிலமான உ.பி தான்.மொத்தமுள்ள 80 எம்.பி- யில் 20 பேருக்கு இந்த தகுதி(????)உண்டு. (இதிலயும் நாங்கதா பெறிய்ய்ய ஆளூன்னு காட்டுறாங்க) இதை விட முக்கியமாக கவனிக்க வேண்டியது கேபினட் அமைச்சர்களிலேயே ஐந்தில்,ஒரு பங்கினர் கிரிமினல் ரெக்கார்டு உள்ளவர்கள் என எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்படுகின்றனர்.(திருடனுக்குதான் திருடனப்பத்தி தெரியும்)

இன்னொரு பக்கம் அரசியலை குடும்பத் தொழிலாக்கி, "ஸ்டேடு மவனுக்கு,சென்டரலு மருமவனுக்கு"(குடும்பச்சொத்தையும் பிரிச்சாச்சு அது வேற விஷயம்) என பாகப்பிரிவினை செய்யும் கருணாநிதி போன்ற மூத்த(?) அரசியல்வாதிகள். கடந்த மக்களவை தேர்தலில் மட்டும் 240 அரசியல் குடும்பங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 2004 தேர்தலுக்கு முன்பு "உடன்பிறப்புக்களாலேயே" யாரென்று அறியப்படாத 'தயாநிதி மாறன்' இன்று 'பில் கேட்ஸ்'-டன் கைகுலுக்குவது இது போல கொல்லைப்புறமாக வந்துதான்.இது போல எல்லா மாநிலத்திலும் நிறையவே உண்டு.
ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போது கொள்கைகளை கொளுத்தி விட்டு பதவியை குறி வைத்து நிறம்(அணி)மாறும் பச்சோந்திகள் நிறைந்தது நம் நாடு.வரும் சட்டமன்ற தேர்தலில் திருவாளர்.'மரம் வெட்டி'இராமதாசு எந்தப்பக்கம் தாவுவார் என்று கருத்துக் கணிப்பு நடத்தினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. மத்தியில் தோழமை,மாநிலத்தில் எதிர்க்கட்சி என "கம்யூனிஸ்டு நாடகங்கள்"நடக்கின்றன.
அரசியல் பிழைப்பு இப்படியிருக்க,முதல் குடிமகன்,ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களோ 2020-ல் இந்தியா வல்லரசு,பேரரசு என "சின்னப்புள்ளத்தனமா"கனவு காண சொல்கிறார்.மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான உருப்படியான திட்டங்கள் ஒன்றும் இல்லை.ஒவ்வொரு மத்திய பட்ஜெட்டிலும்,மக்கள் நலத்திட்ட மானியங்கள் என்ற பெயரில் 1,15,000 கோடிக்கும் மேல் ஒதுக்கப்படுகிறது.இதில் ஒரு ரூபாயில் பதினைந்து பைசாவிற்கும் குறைவாகவே மக்களை சென்றடைகிறது.இவ்வாறு வறுமை கோட்டிற்கு கீழுள்ளவர்களின் தரம் உயராமல்,அவர்களின் எண்ணிக்கை தான் உயருகிறது.
கேள்வி கேட்பதற்கே (வாய தொறக்கவே)காசு கேட்ட மக்கள் பிரதிநிதிகள் இங்குதான் இருக்கிறார்கள்.குழந்தை பிறக்கும்போது, மருத்துவமனை ஆயாக்களில் ஆரம்ப்பித்து,மரணித்து செல்லும் சுடுகாட்டு வெட்டியான் வரை அனைத்து தேவைகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இயற்கை சீரழிவுகளுக்கான நிவாரண நிதிகளை கூட சுருட்டும் அதிகாரமிக்க(???) சில அதிகாரிகளும்,அவற்றில் பங்கு கேட்ட அரசியவாதிகளும் இங்குண்டு.

ஆக இவர்களை ‘களை’ எடுக்க கடுமையான தண்டனைச் சட்டங்கள் வேண்டும். அவை மக்களின் வேதனையை வெளிப்படுத்தக்கூடியதாக அமைந்தாக வேண்டும்,அதற்கு இந்த அரசியல்வாதிகளாலேயே இயற்றப்பட்ட சட்டங்களை குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு, தெளிவான வழிக்காட்டுதல் அடங்கிய இறைச்சட்டங்களை பின்பற்ற முன் வர வேண்டும்.அப்படி பின்பற்றுவோமேயானால் இந்தியா மட்டுமல்ல உலகமே இன்புற்று விளங்கும். சிந்தியுங்கள்.......