பாலைவன பரங்கியன்

அரசியல்வாதிகள் குறித்த விமர்சனங்களுக்கான வலைப்பூ

Saturday, March 25, 2006

பிணந்திண்ணிக் கழுகு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலை நகர் அபுதாபியில், இம்மாதம் 13 ஆம் தேதி.'இராணுவக் கல்வி மற்றும் ஆய்வுக்கான அமீரக மையம்' என்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்த மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்காவின் முன்னாள் நாடாளும் மன்ற உறுப்பினர் (U.S.Senator) கேரி ஹார்ட் (Gary Hart) பேசும்போது,

"உலகின் பெருமளவு (20%) எண்ணெய் வினியோகம் ஒழுகுவது வளைகுடா நாடுகள் வழியாகத்தான்....அந்நாடுகளை UN2 என்பதுபோல் ஒரு சர்வதேசக் கண்காணிப்புக் குழுவின்கீழ் விட வேண்டுமே என்று சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .. மீண்டும் (எண்ணெய்க்காக). அமெரிக்கா மூன்று, நான்கு. ஐந்து என வளைகுடாப் போர்களை நடத்துவதை நான் விரும்பவில்லை. பின் என்னதான் போம்வழி?..

வளைகுடாவைச் சர்வதேச நிர்வாகத்திடம் ஒப்படைத்து எண்ணெய் ஒழுக்கைக் கையாள வேண்டும்.. அரசியல் எங்களைச் சுற்றியே வளர்கிறது.... என் படைவீரர்கள் அயல் நாட்டில் கூலிப் படையினராவதை நான் விரும்பவில்லை"
என்று பேசியுள்ளார்.

இது, கழுகை கவுரவ(அலங்கார)ச் சின்னமாகக் கொண்ட அரபு நாடுகளுக்கு அமெரிக்கக் கழுகு வெளிப்படையாக விட்ட மிரட்டலேயாகும். மாநாட்டில் உரையாற்ற விருந்தாளியாய்த் தம்மை அழைத்த நாட்டில் நின்று இப்படிப் பேச இத்தனை நெஞ்சழுத்தத்துக்குக் காரணம் உள்ளார்ந்த பகையே எனக் கருத இடமுள்ளது. இது வெறும் ஊகமன்று.

சமீபத்தில், அமெரிக்க நாட்டின் அதி முக்கிய ஆறு துறைமுகங்களை நிர்வகிக்கும் உரிமையை,P&O என்ற பிரிட்டிஷ் நிறுவனத்திடமிருந்து, சட்ட ரீதியாக, அதன் பங்காளிகள் அனைவரின் முழு ஒப்புதலோடு துபையின் DP WORLD என்ற நிறுவனம் ஏற்றெடுத்தது. உடனே அமெரிக்காவில் கட்சி வேறுபாடின்றி இதற்கெதிராகப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.ஆளும் கட்சியும் எதிக்கட்சியும் வரிந்து கட்டிக் கொண்டு இவ்வுடன்படிக்கைக்கு எதிராகக் களத்தில் இறங்கின.

அமெரிக்கத் துறைமுகங்களின் நிர்வாகம் அரபு முஸ்லிம் நாட்டின் கைக்குப் போவதால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்து என அமெரிக்காவின் முன்னாள் அதிபரின் மனைவியும் அமெரிக்க நாடாளும் மன்றத்தில் ஜனநாயகக் கட்சி உறுப்பினருமான ஹில்லாரி கிளிண்டன் தொடங்கி வைத்த எதிர்ப்பு, அக்கட்சி உறுப்பினர்களாலும் ஆளும் கட்சியான புஷ்ஷின் குடியரசுக் கட்சி உறுப்பினர்களாலும் பெரும் வேகமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டு, இன்று துபை பல கோடி டாலர்கள் மதிப்புள்ள உடன்படிக்கையைக் கைவிட வேண்டிய நிலைக்கு ஆளாகி நிற்கின்றது.

எந்த துபை...?

9/11 இக்குப் பின் ஆப்கானிஸ்தானையும் இராக்கையும் - பன்னாட்டுப் படைகளின் பெரும் துணை கொண்டு அழித்து, வலிந்து திணிக்கப்பட்ட ஜனநாயகத்தின் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, புஷ் தொடங்கிய 'தீவிரவாத்த்துக்கெதிரான போரி'ல் புஷ்ஷுக்கு உறு துணையாக நின்ற துபை.....

அமெரிக்காவின் கப்பல் படைக்குத் தளம் ஒதுக்கியும் அதன் விமானப் படைக்குத் தனது வான் வழியை அனுமதித்து, குண்டு வீசும் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பித் தற்காலிகத் தளம் அமைத்துக் கொடுத்து, அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய நண்பனாய் நின்ற துபை.....

துபையின் D P WORLD நிறுவனம் அமெரிக்கத் துறைமுகங்களின் நிர்வாகத்தை ஏற்றெடுப்பதால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்ற கூச்சலை CNN தொலைக்காட்சி நிறுவனமே நாடு முழுதும் எடுத்துச் சென்றது. CNN அமெரிக்காவில் ஒரு online poll நடத்தியது. "Who would you rather have overseeing operations at U.S. ports?Arab based ports company or U S based mafia?" என்பதே கேள்வி. வியக்கத் தக்க வகையில் 63% பேர் அமெரிக்க ரௌடிக் கும்பலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அறிவுள்ள எவர்க்கும் இதன் காரணம் மிக எளிதில் புரியும்.

ஆம்!

9/11 ஐத் தொடர்ந்து அமெரிக்க ஊடகங்கள் -Electronic & Print media- அரபுகளுக்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் கட்டவிழ்த்து விட்ட எதிர்ப் பிரச்சாரத்தின் விளைவே இது..

தீவிரவாதத்துக்கெதிரான தமது போராட்டத்தில் உற்ற துணையாக நின்ற துபைக்கு ஆதரவாக 'புஷ்ஷன்' ஏதாவது செய்தாரா? போர்க் காலத்தில் துபை அமெரிக்காவுக்குச் செய்த உதவி, ஒத்துழைப்பைப் பற்றி, 'ஹீன ஸ்வரத்தில்' புஷ் முனகியது ஊடகங்களின் பெருங்கூச்சலில் 'புஸ்ஸ்ஸ்ஸ்' எனக் காற்றுப் போய் அமுங்கிப் போனது.

9/11 இக்குப் பின் அரபு முஸ்லிம்களுக்கெதிராக ஊடகங்களை ஊக்குவித்த புஷ் இன்று அதே ஊடகங்களால் அதே காரணம் சொல்லப் பட்டு மூக்க றுக்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்கர்கள் 'உலகமயமாக்கல்' என்றும், 'தடையில்லாச் சுதந்திர வணிகம்' என்றும் உலகறிய ஒப்பாரி வைப்பது உலகை ஏய்த்துத் தம்மை நிலை நிறுத்துவதற்குத்தான். அவர்கள் தம் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் தடையில்லா வணிகத்துக்கு வந்த,'உற்ற போர்த் தோழன்' துபையை வரவேற்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இன ஒதுக்கல் கொள்கையைக் கடைப் பிடித்துள்ளனர் என்பது தெளிவு.

இந்தப் பின்னணியில்தான் மேலே சொல்லப் பட்ட கேரி ஹார்ட்டின் மிரட்டலைக் காண வேண்டும்.

துபைக்குத் துறைமுக நிர்வாகத்தை மறுத்து விட்டு, அந்நாட்டைத் தன் பிடியில் வைத்துக் கொள்ள புஷ் நிர்வாகம் தன் 'மாஃபியா' வேலையைத் தொடங்கி விட்டது. புஷ்ஷுக்கு ஆதரவாய்த் தீவிரவாதப் போராட்டத்தில் துணை நின்றதால் துபையின் சுற்றுலா வருமான வழிகளைத் தகர்த்து விடப்போவதாக,'கைதா-அல்-ஜிஹாத்' என்ற அமைப்பு மிரட்டல் கடிதம் அனுப்பியதாக அமெரிக்க இராணுவத்தின் பழைய ஆவணங்களை வெளியிட்டுள்ளனர்.

"நீங்கள் அமெரிக்காவுக்குத் துணை நின்றால், வருமானத்திற்காய் நீங்கள் நடத்தும் வெட்கம் கெட்ட சுற்றுலாத் துறையைத் தகர்ப்பதன் மூலம் உங்களைச் சுலபத்தில் வெட்ட எங்களால் முடியும்" என்று கடிதம் எழுதி எச்சரிக்கை விடுத்ததாய் அவ்வாவணம் கூறுகிறது.

இராக்கை அநியாயமாக ஆக்கிரமிக்க WMD என்ற, "இல்லாப் பொருளைத்" தேடிப் புறப்பட்ட புஷ், துபை கைவிட்டுப் போகாமலிருக்க, "எழுதாக் கடிதத்தை" ஏன் வெளியிட்டிருக்கக் கூடாது? மேலே சொன்ன அமெரிக்க நாடாளும் மன்ற முன்னாள் உறுப்பினரின் மிரட்டலையும் இதனுடன் கூட்டிச் சேர்த்துப் படியுங்கள்.


புஷ் வெறும் கழுகல்லன்: பிணந்திண்ணிக் கழுகு என்பது புரியும்.

0 Comments:

Post a Comment

<< Home