பாலைவன பரங்கியன்

அரசியல்வாதிகள் குறித்த விமர்சனங்களுக்கான வலைப்பூ

Thursday, May 04, 2006

கடைசி தேர்தல்

விஜயகாந்த்
ஜெயலலிதா
கருணாநிதி
இவர்களில் யாராவது ஒருவருக்கு மே 8-ம் தேதி தமிழகத்தில் நடக்க இருக்கும் தேர்தல் கடைசி தேர்தலாக இருக்கலாம்.

கடந்த வருடம் தே.மு.தி.க-வை ஆரம்பித்து, முதல் தேர்தலை சந்திக்கும் விஜயகாந்த் பா,ம.க-வின் கோட்டையாக கருதப்படும் விருத்தாசலத்தில் போட்டியிடுகிறார்.கட்சி ஆரம்பிக்கும் முன்பே பா,ம.க-வால் அதிகம் சீண்டப்பட்ட விஜயகாந்த் இரு முக்கிய கட்சிகளின் வன்னியர் குல வேட்பாளர்களை எதிர்த்து களமிறங்கியுள்ளார். தான் இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், கட்சியை கலைத்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார் (இந்தியா டுடே 8-பிப்ர-06) தனக்குத்தானே வைத்துக்கொண்ட பரீட்சையில் விஜயகாந்த் தோற்றால்,அவருக்கு இந்த தேர்தல் முதலும்,கடைசியுமாக அமையும்.

ஊழல் வழக்குகளில் தண்டணை பெற்று ‘தற்காலிக ராஜினாமா’ செய்து, பின்பு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளில் சில இன்னும் இழுத்து கொண்டு இருக்கின்றன. தி.மு.க கூட்டணி ஜெயித்து ஆட்சிக்கு வருமேயானால் இப்போது நடக்கும் ஆட்சியின் ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டோ அல்லது உருவாக்கப்பட்டோ ஜெ. மீது இன்னும் சில வழக்குகள் தொடரப்படும். மத்தியிலும்,மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து கொண்டு எப்படியாவது ஜெயலலிதாவை தண்டனையில் சிக்க வைக்கும் முயற்சிகள் முழு மூச்சாக நடத்தப்படும்.அப்படி தண்டனை பெறும் பட்சத்தில் தேர்தல் ஆணைய விதிமுறைப்படி ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுவது??????

கருணாநிதி - இவரைப் போன்ற சமவயதுடையவரான ஜோதிபாசு போன்றவர்கள் ஒதுங்கி விட்ட பின்னும் இவர் போட்டியிடுவது, இந்த தேர்தலில் தி.மு.க வெல்லும் பட்சத்தில் ஆட்சியை வாரிசுகளிடம் ஒப்படைத்து கட்சியில் மற்றொரு பிளவு ஏற்படாமல் தடுக்கவே என்று சொல்லலாம். ஒரு வேளை தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்தாலும் வயது மூப்பின் காரணமாக இனி வரும் தேர்தல்களில் கருணாநிதி போட்டியிட மாட்டார் என நம்பலாம்.

எது எப்படியோ நடக்கக்கூடிய தேர்தல் ஒருவருக்கு, ஏன் இருவருக்கு கூட கடைசி தேர்தலாக அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. காத்திருப்போம் மே- 11 வரை

Friday, April 28, 2006

வந்துட்டாரய்யா வந்துட்டாரு….

ஆறு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாகியிருந்த “கராத்தே தியாகராஜன்”,புகழ் பெற்ற முன்னாள் மேயர் சர்.பி.டி.தியாகராஜன் பிறந்த நாளில் மீண்டும் மாநகராட்சிக்கு வந்தார். காங்கிரஸில் ஐக்கியமாகி விட்ட இவரை மேள,தாளத்துடன் வரவேற்றார்களாம் காங்கிரஸ்காரர்கள். சினிமா பாணியில், மொபைலில் பேட்டிக் கொடுத்துக்கொண்டிருந்த கராத்தே, தேர்தல் நெருங்கி விட்ட வேளையில் மீண்டும் ஆஜராகி விட்டார்.

காங்கிரஸிலிருந்து, அ.தி.மு.க-விற்கு தாவிய வேகத்திலேயே பதவியையும் அடைந்த கராத்தே, அதே வேகத்தில் வழுக்கினார். சமீப காலத்தில் அ.தி.மு.க-வில் இருந்துக்கொண்டே ஜெயலலிதாவுக்கு அதிக ‘குடைச்சல்’ கொடுத்தவர் இவர் மட்டுமே. அதனால் தான் ஜெயாவும் இவரை ஓட, ஓட விரட்டினார்.

தலை மறைவான காலங்களில் போலிஸ்க்கு பயந்து தனது தாயாரின் இறப்பிற்கு கூட வராத இந்தப் “புண்ணியவான்” இப்போது வந்து துணை மேயராக தொடர்ந்து மக்களுக்கு பணி(?) செய்வேன் என்கிறார். இப்படி அரசியல் “கராத்தே” போட்டு இவர்கள் சாதிக்க நினைப்பதுதான் என்ன???